Breaking News
Home / விவசாயம் / வரகு, சாமை, குதிரைவாலி… – விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!
Varagu-arisi

வரகு, சாமை, குதிரைவாலி… – விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!

 

அசத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து… கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம்.

“கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 1901-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முன்னோடி ஆராய்ச்சி நிலையம். சுதந்திரம் பெற்ற பிறகு இந்த ஆராய்ச்சி நிலையம், பருத்தி மற்றும் சிறுதானிய ஆராய்ச்சி நிலையமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுச் சென்னை வேளாண்மைத்துறையின்கீழ் செயல்பட்டு வந்தது. கடந்த 1.4.1981-ம் தேதியன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுச் சிறந்த மானாவாரி ஆராய்ச்சி நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மானாவாரிப் பயிர்களான பருத்தி, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் பயறு வகைகள் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்; இவற்றில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்குதல்; மானாவாரிப் பயிர்களுக்கான உழவியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம்; ஊட்டச்சத்து மேலாண்மை; மானாவாரிப் பயிர்களுக்குத் தேவையான ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டறிதல்; வானிலை முன்னறிவிப்பு சார்ந்த வேளாண் ஆலோசனைகளை வழங்குதல்; பருவகாலப் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கத்திடல் மூலமாக மானாவாரிக்கேற்ற தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி விவசாயிகளிடையே பயிர் உற்பத்தியைப் பெருக்குதல் ஆகியவை இந்த ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய நோக்கங்கள்.

கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் 25 ஆண்டு சேவைக்கான விருது எங்கள் நிலையத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சிறந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கான விருதுகள் எங்கள் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. 2009-ம், ஆண்டில், அகில இந்திய ஒருங்கிணைந்த மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சித் திட்டத்துக்காகச் ‘சவுத்திரிலால் விருது’ வழங்கப்பட்டுள்ளது” என்ற முருகன் ஆராய்ச்சி நிலைய வெளியீடுகள் குறித்துச் சொன்னார்.

“எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை… கருங்கண்ணிப் பருத்தி, ஒட்டுரகப் பருத்தி, சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு, வரகு, சாமை, உளுந்து, பாசி, சூரியகாந்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களில் இதுவரை 59 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பருத்தியில் கே-1 முதல் கே-12 வரையும்; சோளத்தில் கே-1 முதல் கே-12 (இவற்றில் கே-நெட்டை வீரிய ஒட்டுரக சோளம்) வரையும் வெளியிடப்பட்டுள்ளன. சோளத்தில் கே-8 மற்றும் கே-12 ஆகிய ரகங்களும்; பருத்தியில் கே-11, கே-12 மற்றும் கே.சி-3 ஆகிய ரகங்களும்; மிளகாயில் கே-1 மற்றும் கே-2 ஆகிய ரகங்களும் விவசாயிகள் மத்தியில் பிரபலமானவை.

சோளத்தில் கே-12 என்ற ரகம், தானியம் மற்றும் தீவனம் ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்தான் கால்நடைகள் அதிகம். இந்த மாவட்டங்களில்தான் தீவனத் தட்டைச் சோளத்துக்குத் தட்டுப்பாடும் உள்ளது. அதனால் இம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கே-12 சோளத்தை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள். கே-1 மற்றும் கே-2 ஆகிய மிளகாய் ரகங்களில் ‘கேப்சைசின்’ என்ற காரத்தன்மை அதிகம் உள்ளதால் ஆந்திர மாநில விவசாயிகள்கூட இந்த ரகங்களை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசினார் முதன்மை விஞ்ஞானி பாஸ்கர். “ஹைதராபாத்தில் உள்ள மத்திய மானாவாரி ஆராய்ச்சி நிலையம், கடந்த 1971-ம் ஆண்டில் அகில இந்திய ஒருங்கிணைந்த மானாவாரி வேளாண் ஆராய்ச்சித் (AICRPTA) திட்டத்தைத் தமிழ்நாட்டில் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் துவக்கியது. கடந்த 47 ஆண்டுகளாகச் செயல்படுத்தப் பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம்… தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மானாவாரி நிலங்களுக்கு உகந்த பயிர் ரகங்கள், உழவியல் முறைகள், உர மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவை குறித்துச் சொல்லிக் கொடுத்து வருகிறோம்.

கடந்த 2011-ம் ஆண்டில் ஹைதராபாத் மத்திய மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் எங்கள் மையத்தில் தேசிய அளவிலான ‘காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண்மைத் திட்டம்’ துவக்கப்பட்டுள்ளது. வானிலை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பரப்புவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் கோவில்பட்டி வட்டாரத்தில் 3 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமங்களில் 15 முதல் 20 விவசாயிகளைத் தத்தெடுத்து, அவர்களுடைய நிலங்களில் மானாவாரிச் சாகுபடியில் உள்ள இடர்பாடுகளை நிவர்த்திச் செய்யக்கூடிய தொழில்நுட்பங்களைச் செயல்விளக்கம் மூலமாகச் சொல்லிக் கொடுத்து வருகிறோம்.

கடந்த ஆண்டுக் கோவில்பட்டி வட்டாரத்தில் வடக்குப்பட்டி, தோப்புரெட்டியாபட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம், தருமத்தன்பட்டி ஆகிய 4 கிராமங்களைத் தத்தெடுத்து, அக்கிராமங்களில் உள்ள 20 விவசாயிகளுக்குச் செயல்விளக்கப் பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை 140 விவசாயிகளுக்கு இப்பயிற்சி அளித்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த வேளாண் வானிலை ஆராய்ச்சி திட்டம் குறித்துப் பேசினார், வேளாண் வானிலையியல் வல்லுநர் முனைவர் சுதாகர். “ஹைதராபாத், மத்திய மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தின்கீழ் கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த வேளாண் வானிலை ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானாவாரி விளை நிலங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ளன.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வானிலை முன்னறிவிப்பைப் பெற்று அதனுடன், தொழில்நுட்ப அறிவுரைகளையும் இணைத்து விவசாயிகளுக்குக் குறுந்தகவலாக அனுப்பி வருகிறோம். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியின் சராசரி மழையளவு 730 மில்லி மீட்டர்.

வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில், ‘12 மழை நாள்கள்’ அளவுக்கு மழை பெய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். இந்த அளவு கூடினாலோ, குறைந்தாலோ விவசாயம் பாதிக்கப்படும். விதைக்க வேண்டிய பருவம், மழை பெய்யும் காலம், பூச்சித்தாக்குதல் போன்ற விஷயங்கள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம் மூலம் விவசாயிகளுக்குச் சொல்வோம்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாள்களில் கிஸான் போர்டல், கிசான் ஸ்லைடா, கிசான் சுவேதா போன்ற செயலிகள் மூலம் தமிழில் குறுஞ்செய்திகளாக அனுப்பி வருகிறோம். 53,000 விவசாயிகள் இத்தகவல்களைப் பெற்று வருகிறார்கள்” என்றார்.

தொடர்புக்கு: 
பேராசிரியர் மற்றும் தலைவர் 
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி – 628 501 
தூத்துக்குடி மாவட்டம் 
போன்: 04632 220533

 

நன்றி விகடன்

About

Check Also

green-field-corridor-well

எட்டு வழி பசுமைச்சாலையில் புது பிரச்னை!

  “ஐயா… நாங்களும் இந்தியர்கள்தானய்யா. எங்களுக்கும் நாட்டின் மீது பற்று உண்டு. அதனாலதானய்யா சொல்றோம்… விவசாயம் செழிப்பா இருக்குற நிலமய்யா. …