Breaking News
Home / கட்டுரைகள் / தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?
TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன!

TO-PURIFY-WATER

ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் வறட்சி பற்றிய குறிப்புளை எல்லாம் எழுதிப் பார்த்தால் நூற்றுக் கணக்கில் இருக்கும். இதனால்தான் தமிழில் “நீரையும் சீராடு” – என்று ஒரு பழமொழி யையும் சொல்லிவைத்தார்கள்.

“ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகை” என்று எங்கள் மதுரையில் ஓடும் வைகை நதியின் சிறப்பைப் போற்றுவர். ஆனால் அப்படிக் கிடைக்கும் ஊற்று நீர், களிமண் பூமியாக இருந்தால் கலங்கிப் போய் இருக்கும். அப்படியே குடிக்க முடியாது. இதற்காக தமிழன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, — கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி? என்று கண்டுபிடித்து வைத்தான். அது மட்டுமல்ல! கிணற்றுக்கடியில் இருக்கும் கலங்கல் நீரைக்க்கூட சுத்தப்படுத்தி வாளியில் ஏற்ற வழி கண்டுபிடித்தான்.

Strychnos_potatorum_5

நான் 1993 முதல் லண்டனில் இருந்து வெளியான “மேகம்” மாத இதழில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்” என்று கட்டுரை எழுதி வந்தேன். அது 2009-ல் புத்தக வடிவில் வெளியானது (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை). அதற்கு முன்பாகவே நிலாசாரல்.காம் அதை “ஈ புக்”—ஆக வெளியிட்டது. அதில் (பக்கம் 17), கலித்தொகையில் வரும் தண்ணீர் சுத்தப்படுத்தும் முறை பற்றிய குறிப்பை சுருக்கமாக எழுதி இருந்தேன். அதை சற்று விரிவாகக் காண்போம்.

கலித்தொகை என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் ஐந்து பகுதிகள் உண்டு. அதில் நல்லந்துவனார் பாடிய நெய்தல் கலி கடைசி பகுதியாக வருகிறது. அதில் வரும் ஒரு குறிப்பு:–

நல்கிய கேள்வன் இவன் – மன்ற, மெல்ல

மணியுள் பரந்த நீர்போலத் துணிவாம்

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்

கலங்கிய நீர்போலத் தெளிந்து, நலம் பெற்றாள்!

நல் எழில் மார்பனைச் சார்ந்து………..”

இதன் பொருள்: – மணியும் அதனுள் பரந்து விளங்கும் நீரும்போல, இவ்விருவரும் ஒருமித்த மனமுடையவர் என்று அனைவரும் துணிந்தனர்- திருமணமும் நடந்தது. அதன் பின்னர் அவளைக் கண்டவர் சொன்னார்கள்:

இல்லத்திலுள்ள நீர் கலங்கி இருந்தால், அது இருக்கும் பாத்திரத்துள் சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த்ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, அந்த நல்ல அழகுடைய மார்பனைச் சேர்ந்ததும் இவளும் தெளிவுற்று நலம் பெற்றாளே!

water puried

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடும்)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி இதைச் செய்தனர்.

கதகப் பொடி வடமொழியில் உள்ள நியாயங்களில் ஒன்றாக வருவதும் அதை சத்திய சாய்பாபா உவமையாகப் பயன்படுத்துவதும் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் இதே பிளாக் –கில் நேற்று வெளியாகியுள்ளது. (கட்டுரைத் தலைப்பு நீரில் அமிழ்ந்த சுரைக்காய், மார்ச் 1 வெளியீடு)

தமிழர்கள் அந்தக் காலம் முதல் இன்று வரை கோடைகாலத்தில் வீட்டின் ஒரு ஓரத்தில் மண்ணை நிரப்பி, அதன் மீது பானையை வைத்து, அந்த நீரில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் குடிப்பது நாம் அறிந்ததே. வெட்டி வேர் எஸ்ஸன்ஸ் என்பது இப்போதெலாம் மிகவும் அதிக விலைக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது அவர்கள் இதை பெர்Fயூம் செய்யப் பயன்படுத்துகின்றனர்!

best water

பாதிரிப் பூவின் மகிமை

ஆனால் மற்றொரு தமிழ் இலக்கியப் பாடல் பாதிரிப் பூவின் மகிமையைப் பாடுகிறது

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல் சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு – நாலடியார்

பொருள்:–பழமையான சிறப்பையும், ஒளி பொருந்திய நிறத்தையும் உடைய பாதிரிப்பூவைச் சேர்தலினால், புதுப் பானையானது தன்னிடமுள்ள தண்ணீர்க்குத் தன் மணத்தைக் கொடுத்தது போல, கல்லாதவர்களே ஆயினும் கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்தால் அவர் சேர்க்கையால் நல்லறிவு நாளுக்கு நாள் பெருகும்

அருமையான உவமை. பானைத் தண்ணீருக்குப் பாதிரிப் பூ வாசனை தரும். கல்வி அறிவு மிக்கவர்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவொளி பரப்புவர்.

வராஹமிகிரரும், பிருஹத் சம்ஹிதா நூலில் தண்ணீர் சுத்திகரிப்பு பற்றிப் பேசுகிறார். கடுக்காய், நெல்லிக்காய்,பத்ரமுஷ்டா புல் ஆகியவற்றை கிணற்று நீரில் போடும்படியும் அப்போது அது தெளிந்து விடும் என்றும் சொல்லுகிறார்

தமிழில் இதே கருத்தை வலியுறுத்தும் பழமொழிகளும் உண்டு. நூலோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றும் வசனங்கள் உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது பாதிரிப் பூவின் பயன்பாடுதான்.

Fragrant_root_vetti-ver

வெட்டி வேர், விளாமிச்சை வேர், பாதிரிப் பூ, தேற்றாவின் கொட்டை முதலியன பயன் தரும் தாவரங்கள். ஆப்பிரிக்கர் சொல்லுவது போல முருங்கை விதைகளப் பயன்படுத்தியும் நன்மை அடையலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதங்கள் இவை.

swami_48@yahoo.com

About

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …