Breaking News
Home / இன்று ஒரு தகவல் / 5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்… ஜாக்கிரதை!

5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்… ஜாக்கிரதை!

5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்… ஜாக்கிரதை!

சம்பவம் 1

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வேகமாக பைக் ஒட்டிக்கொண்டு செல்ல, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மீது மோதிவிட்டார். இதில் கண்ணன் படுகாயம் அடைந்தார். கண்ணன், மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட,  லட்சக்கணக்கில் பில் வருகிறது.

ரமேஷ் தனது பைக்குக்கு ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதால், இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும் என்று கவலையில்லாமல் இருக்கிறார். அவர் எடுத்து வைத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் காட்ட, அது போலி பாலிசி எனத் தெரியவந்ததும் ரமேஷுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

சில நாள்களுக்குமுன்பு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நின்றிருந்த ஒருவர் தன்னை இன்ஷூரன்ஸ் முகவர் ஒருவர், தன்னிடம் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொண்டால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்று சொல்ல, அவரிடம் தன்னுடைய மோட்டார் இன்ஷூரன்ஸை புதுப்பித்தது ரமேஷின் ஞாபகத்துவர, அவரைத் தேடி ஓடினார். ஆனால், அங்கே இல்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் கண்ணனுக்கான மருத்துவச் செலவு ரூ.5 லட்சத்தை ரமேஷே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, கடைசியில் ரூ.5 லட்சம் கட்டி நொந்துபோனார் ரமேஷ்.

சம்பவம் 2 

2014-ம் ஆண்டு… தனது மினி லாரியின்  இன்ஷூரன்ஸைப் புதுப்பிக்கத் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குக் காசோலை தந்தார் ஒருவர். காசோலை தந்தவுடன் தற்காலிக இன்ஷூரன்ஸ் சான்று ஒன்றை அளித்தது. அதன்பின்னர் அந்தக் காசோலை வங்கிக்கணக்கில் பணமில்லாததால் திருப்பியனுப்பப்பட்டது.  காசோலை திருப்பியனுப்பப்பட்ட தகவலை இன்ஷூரன்ஸ் நிறுவனம், வாகன உரிமையாளருக்குத் தெரிவித்தது. தற்காலிக இன்ஷூரன்ஸ் சான்றினைப் பெற்றவர் அதனைக்  காவல் துறையிடம் காட்டி அபராதம் கட்டாமல் தப்பிவிட்டார். இந்த விபத்தினால்   பாதிக்கப்பட்ட மதனகோபாலனுடன் பேசினோம்.

“2014-ல் சென்னை வடபழனி சாலையில் வாகனம் ஒன்று மோதியதில் என் மாமியார் கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கு தனியார் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. அந்த நிறுவனத்திடம் இழப்பீட்டுத் தொகையைக் கோரியபோது, பிரீமியத்தைப் புதுப்பிக்கும்போது வாகன உரிமையாளர் தந்த காசோலையை திரும்ப அனுப்பிவிட்டோம். அவருக்கு நாங்கள் பாலிசி எதுவும் தராததால், இன்ஷூரன்ஸ் தொகை எதையும் தரவியலாது என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. நாங்கள் அந்த நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந்துள்ளோம். கடந்த மூன்றாண்டுகளாக வழக்கு நடந்துவருகிறது. இதுவரை இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரும் தலைமறைவாகிவிட்டார். உயிரிழப்பைச் சந்தித்ததோடு அதற்கான இழப்பீடும் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப் பட்டிருப்பது நாங்கள்தான்” என்றார்.

இதுமாதிரியான பிரச்னைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு என்று வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷிடம் கேட்டோம். “இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது காசோலை தந்து மோசடி செய்வது புதிதல்ல. ஏதேனும் விபத்தில் இவர்களது வாகனம் சிக்காதவரை குறைந்தது ஓராண்டு காலம்வரை தற்காலிகச் சான்றை வைத்தே தப்பிவிடுவார்கள். ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு இத்தகைய மோசடிகள் குறித்த தகவல் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். அதேபோல, இந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தினாலும்கூட அதன் உரிமையாளர் தப்பிவிட வாய்ப்பிருக்கிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை உடனே இன்னொருவருக்கு விற்றுவிட்டு, தங்களது வீட்டு முகவரியையும் மாற்றிவிடுகிறார்கள்.

இப்படியான வழக்குகளில் ‘பே & ரெகவர்’ என்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் என இருவர் மீதும் வழக்குத் தொடர முடியும். எனினும், இழப்பீடாக பல லட்சங்களை இழக்க விரும்பாத இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழக்கை இழுத்தடிப்பதிலேயே குறியாக இருக்குமென்பதால் இழப்பீட்டைப் பெற காலதாமதமாகும்.

இந்த மாதிரி வழக்குகளில் ஆர்.டி.ஓ அலுவலகம், அந்த வாகனத்தைக் கைப்பற்றுவதோடு, வாகன ஓட்டுநரின் லைசென்ஸையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தால், உடனடியாக இன்ஷூரன்ஸை முறையாகப் புதுப்பிப்பார்கள். ஆனால், இதுபோன்ற இன்ஷூரன்ஸ் வழக்குகளில் ஆர்.டி.ஓ அலுவலகம் தீவிர கவனம் செலுத்து வதில்லை; நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை. இதனால்தான் இந்த மோசடி நிறைய நடக்கிறது.

மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எங்கே எடுக்க வேண்டும் என  பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். தெரு முனையில், ரயில் ஜங்ஷனில், பஸ் ஸ்டாண்டில், சலுகைக் கட்டணத்தில் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்துத் தருவதாகச் சொல்பவர்களை நம்பி, மோட்டார் இன்ஷ்ரன்ஸைப் புதுப்பிக்க நினைப்பது தவறான அணுகுமுறை. நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கே சென்று பாலிசியைப் புதுப்பிப்பதே சரியான நடைமுறை ஆகும். பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பிரபலமான தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் எடுப்பது நல்லது.

தற்போது பெட்ரோல் பங்குகளில்  ஐந்தே நிமிடத்தில் மோட்டார் இன்ஷூரன்ஸ் எனக் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவர்கள் இன்ஷூரன்ஸுக்காக பணத்தை முதலில் நம்மிடமிருந்து வாங்கிவிடுவார்கள். அதன்பிறகு அந்த நேரத்துக்கு ஏதோ ஒரு சான்றைத் தந்துவிட்டு, தப்பித்துவிடுவார்கள். அதிக கமிஷனுக்கு இவர்கள் ஏதேதோ இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து பாலிசி வாங்கித் தருவார்கள். இவர்களை நம்மால் கண்டுபிடிப்பது சிரமம். எனவே, நாமே நேரடியாகச் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோதான் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதுமாதிரியான மோசடிகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படு கின்றன என பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஒருவரிடம் கேட்டோம்.

“தற்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மோட்டார் வாகனச் சட்டப்படி, இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள், வாகனக் காப்பீடு செய்பவர்களுக்கு, கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கலாம். அதாவது, வாகனமானது முதல் மூன்று ஆண்டுகளுக்கு விபத்தே இல்லாமல் இயங்கினால் `நோ க்ளெய்ம் போனஸ்’ என்று வழங்கப்படும். இதையும் மீறி, மார்ஜினல் டிஸ்கவுன்ட் என்று தள்ளுபடி தருகிறார்கள். அப்படித் தரும்போது, டிஸ்கவுன்டுக்கு இவ்வளவு சதவிகிதம்தான் தரவேண்டும் என்று வரையறை இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் யாரும் பின்பற்றுவதில்லை.

ஒருவர்  காசோலை மோசடி செய்தால், வங்கி ஒழுங்கு முறை சட்டப்படி அவரை சிறையில் தள்ள முடியும். ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகளில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இறங்குவதில்லை. அதேபோல, ஒருவர் க்ளெய்ம் கிடைக்காமல் நீதிமன்றத்துக்குச் சென்றால் சில நேரத்தில், ‘பே அண்டு ரெக்கவர்’ என்று நீதிமன்றம் சொல்லும். அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு உரிய தொகையை அளித்துவிட்டு, அந்தத் தொகையை வாகன உரிமையாளரிடமிருந்து இன்ஷூரன்ஸ் நிறுவனம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, வாகன உரிமையாளர் பணம் தரமாட்டார். அந்தச் சமயத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது மாதிரியான சிக்கல் வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அப்பீலுக்குச் சென்று   காலம் தாழ்த்தும். இதனால் விபத்தில் சிக்கியவரின் குடும்பம் பாதிப்படையும் என்பது பற்றி இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை’’ என்றார்.

விபத்துக் காப்பீடு தொடர்பான இன்ஷூரன்ஸை, நம்பகமான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுகி புதுப்பித்துக்கொள்வது அவசியம். அலைச்சலுக்குப் பயந்து இருந்த இடத்தில் இருந்தபடியே விபத்துக் காப்பீடு எடுக்க நினைத்தால், பிற்பாடு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

About

Check Also

222

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் …