Breaking News
Home / இன்று ஒரு தகவல் / பிஏ(PA) வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

பிஏ(PA) வேலையே வேணாம்னு சொன்னேன்!- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி

shanmuganathan

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். 

திருக்கண்ணமங்கையிலிருந்து நாம் தொடங்கலாம்…

திருவாரூர் பக்கமுள்ள சின்ன ஊரு. நிறையப் பேரு ‘பக்தவச்சலம்’னு பேரு வைக்கிறாங்களே, அது எங்க ஊரு சாமிதான். 1942-ல பொறந்தேன். அப்பா நாகஸ்வர வித்வான். வாழ்ந்து கெட்ட குடும்பம். கூடப் பொறந்தது மூணு தம்பிங்க. மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்த பிள்ளை. கஷ்ட ஜீவனம். காவிரியோட கிளை ஆறான ஓடம்போக்கியைத் தாண்டித்தான் போய்ப் படிக்கணும். உள்ளூர்ல, அப்புறம் அம்மையப்பன்ல, அப்புறம் திருவாரூர் வி.எஸ்.டி. ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப சிரமப்பட்டுதான் படிக்க வெச்சாங்க. இன்னும் நெனைப்பிருக்கு. ஃபீஸ் கட்ட கடைசி நாள். காலையில ‘இரு வந்திடுறேன்’னு சொல்லிட்டுப் போனார் அப்பா. ஊருணிக்கரையில போய் சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்திருக்கேன். அப்பா வரலை. ராத்திரி எதையோ அடகு வெச்சுப் பணம் வாங்கிட்டு வந்தார். மறுநாள் ஸ்கூல் போனா, எங்க ஆசிரியரே பணம் கட்டிட்டார். வாழ்க்கை இப்படிப் பலரோட உதவியோடும் சேர்த்துதான் நம்மளை ஒரு இடத்துல கொண்டுவந்து உட்கார வைக்குது.

படிப்பு முடிச்சதும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 50 ரூபாய் சம்பளம். எழுத்தர் வேலை. ஆனா, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வேன்கிறதால எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கூடவே நான் டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட இன்ஸ்டிடியூட்லேயே பகுதிநேர வேலைக்கும் போனேன். வேலையிருந்தால் மூணு ரூபாய் கூலி. ஆனா, எல்லா நாளும் வேலை இருக்காது. காத்துக் கிடக்கணும். அந்தச் சமயத்துலேயே சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதித் தேர்வானேன். வங்கியில யாருக்கும் அனுப்ப மனசில்லை. அப்புறம் அவங்களே, ‘சிட்டி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல வேலை கிடைச்சி ருக்கு. பெரிசா வருவே’ன்னாங்க. சென்னைக்கு வந்தேன். சென்னைக்குப் போறேன்னு தெரிஞ்சதும் என்னோட இன்ஸ்டிடியூட் வாத்தியார் எனக்கு பேன்ட் சட்டை எடுத்துத் தந்தார். சென்னை வந்து முதல் ஒரு மாசம் அந்த பேன்ட் சட்டையைத்தான் தினம் துவைச்சிப் போட்டுக்கிட்டு வேலைக்குப் போனேன். வேற நல்ல உடுப்பு என்கிட்ட கிடையாது. ராயப்பேட்டைல சொர்ணண் ணன் வீட்டுல தங்கியிருந்தேன். ஆபீஸ்க்கு தினம் நடந்துதான் போவேன். மாசம் 135 ரூபாய் சம்பளம். அதுல 75 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிடுவேன். மீதி 60 ரூபாய் என் செலவுக்கு. அது போதாது. வேலையோடேயே தொலைநிலைப் படிப்புல வேற சேர்ந்துட்டேன்.

சரி, இங்கே பகுதிநேர வேலை என்ன கிடைக்கும்னு பார்த்தேன். என்விஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்துல வேலை கிடைச்சுது. காலையில் 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஓடுவேன். 8 மணி வரைக்கும் வேலை. மாசம் 50 ரூபாய் கிடைக்கும். அவர் டிக்டேட் பண்ணுவார். அதை டைப் அடிச்சுக் கொடுக்கணும். கமிஷனர் ஆபீஸ்லேயும் வேலைக்குக் குறைவிருக்காது. பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ வேலைப் பளு தாங்காம ஓடிப்போன ஆட்களெல்லாம் உண்டு. தினம் ஆயிரக்கணக்கான கைதுகள் நடக்கும். எல்லாரோட விவரமும் அடிச்சு சேகரிக்கணும். முதல் நாள் காலையில ஆரம்பிச்சு மறுநாள் மதியம் வரைக்கும் ஒண்ணுக்குப் போகக்கூட எழுந்திரிக்காம வேலை பார்த்த நாளெல்லாம் உண்டு. பத்து, பதினஞ்சாயிரம் பேரைப் பட்டியல்ல அடிக்கணும்னா..! அப்படி வேலை பார்த்ததுக்காக ரிவார்டெல்லாம் வாங்கியிருக்கேன். அப்புறம் தமிழ் ஷார்ட் ஹேண்ட் பாஸ் பண்ணினேன். அதுதான் இன்னிக்கு இந்த இடத்துல உட்கார வெச்சிருக்கு.

கருணாநிதிக்கு எப்படி அறிமுகமானீர்கள்?

அவர் கூட்டத்தை போலீஸ் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக என்னை அனுப்பியிருந்தாங்க. அப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில இருக்கார். பேச்சை நான் எடுத்திருந்த குறிப்பின் அடிப்படையில அவர் மேல கேஸ் விழுந்துச்சு. அப்போ அவர் பேச்சை நான் எடுத்த குறிப்போட ஒரு பிரதியை அவருக்கும் அனுப்பியிருக்காங்க. படிச்சுப்பார்த்தவர், “என் பேச்சை ஒரு மனுஷன் அப்படியே எழுதியிருக்காரே!”னு ஆச்சரியமாயிருக்கார். அப்போ அவர்கிட்ட தமிழ் ஷார்ட் ஹேண்ட் எழுத ஆள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நான் யார்னு கண்டுபிடிச்சுட்டார். “உன்னைப் பொதுப்பணித் துறை அமைச்சர் பார்க்கணும்னு சொன்னாருப்பா”னு சேதி வந்துச்சு. நான் பயந்துட்டேன். கோபாலபுரம் வீட்டில் வந்து பார்த்தேன். “எனக்கு பிஏ வேணும். வந்திடுறியாய்யா?”ன்னார். நான் மறுத்துட்டேன். ஏன்னா, அப்போ என் சம்பளம் போலீஸ்ல 240 ரூபாய் ஆயிருந்துச்சு. அவருக்குக் கீழ வந்தா அது 140 ரூபாய் ஆயிடும். “கஷ்டப்படுற குடும்பம் ஐயா’’ன்னேன். “சரி, போ’’ன்னுட்டார்.

அப்புறம் எப்படிச் சேர்ந்தீர்கள்?

எங்க அப்பா கோதண்டபாணி திககாரர். அவருக்குத் தலைவரைத் தெரியும். ஒருமுறை திருவாரூர் பக்கம் போனப்போ எங்கப்பாவைப் பார்த்திருக்கார். “உங்க பையனை பிஏவா வெச்சிக்கலாம்னு கூப்பிட்டா, ‘வர மாட்டேன்’னு போயிட்டான்!” என்று அவரிடம் சொல்லியிருக்கிறார் தலைவர். எங்கப்பா உடனே எனக்குக் கடிதம் போட்டார். “பணம் பெருசில்லடா தம்பி, அவரு பெரிய மனுஷன். அவருக்கு உதவியா இருக்குறது பெரிய காரியம்”னு எழுதியிருந்தார். அப்பாவுக்குப் பயந்துகிட்டு திரும்ப வும் கோபாலபுரம் வந்தேன். “என்னய்யா, அன்னிக்கு வரலைன்னு போன?”ன்னாரு தலைவர். “எங்க அப்பா கடிதம் எழுதியிருக்காருய்யா”ன்னேன். “சரி, ஏற்பாடு பண்றேன்”னார். ஆனா, அதுக்குள்ளேயே அவர் வேறு ரெண்டு பேரை வேலைக்கு எடுத்துட்டார். அதனால, “முதல்ல சட்ட மன்றத்துக்கு மாறிக்கோ. சமயம் பார்த்து எடுத்துக்குறேன்”னார். ஒரு வருஷம் அப்படிப் போச்சு. அண்ணா மறைஞ்ச சமயம் என் தங்கச்சி கல்யாணத்துக்காக லீவுல ஊருல இருக்கேன். ‘லீவ் கேன்சல். ஜாயின் சீஃப் மினிஸ்டர் ஆபீஸ் அஸ் பிஏ’னு தந்தி வந்துச்சு. உடனே, சென்னைக்கு ஓடி வந்துட்டேன். 16.2.1969 அன்னிக்குத் தலைவர்கிட்ட சேர்ந்தேன். 50 வருஷம் நெருங்குது!

இடையிடையே ஆட்சி மாறினபோதும் எப்படி நீங்கள் அவரிடமே தொடர்ந்தீர்கள்?

வேலைக்குச் சேர்ந்தப்போவே மூணு பிஏக்கள்ல நான்தான் ஜூனியர். குட்டி பிஏன்னு பேர் ஆயிடுச்சு. அம்மா (தயாளு), சின்னம்மா (ராசாத்தி) ரெண்டு பேருமே பிரியமா இருப்பாங்க. 1976-ல் ஆட்சி போச்சு. எல்லாரும் அவர்கிட்டேயிருந்து விலகிட்டாங்க. நான் மட்டும் தினம் வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தேன். தலைவர் கூப்பிட்டு, “நீ அரசாங்க வேலையை ரிஸைன் பண்ணிடு”ன்னார். “சரிங்கய்யா”ன்னு நானும் சொல்லிட்டேன். “பாவம் சின்ன வயசு. இவரு வயசுக்கு செகரட்ரி வரைக்கும் ஆகலாம் மாமா; வேலையை விடச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு பிஏ வெச்சிக்கலாம் மாமா. அந்த இடத்துக் குச் சண்முகநாதனைக் கேட்டு வாங்கிடுவோம்”னு மாறன் சொன்னாரு. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம் உண்டு. கோபம் வரும். திட்டுவாரு. ஆனா, ரொம்பப் பிரியமா இருப்பார். எல்லாருமே வீட்டுல ஒருத்தனாத்தான் பார்ப்பாங்க. ஆனா, முதல்வரா இருந்த எம்ஜிஆர் வேற கோபத்துல ‘முடியாது’ன்னு கோளாறு கொடுத்தார். தலைவருக்குக் கோபம் வந்திருச்சி. அப்படின்னா, “எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியே வேண்டாம்”னு சொல்லிட்டார். நாஞ்சிலாருக்கு விஷயம் தெரிஞ்சு எம்ஜிஆர்கிட்ட பேசினார். “இதையெல்லாம் மறுத்தால் பெரிய கெட்ட பெயர் வந்துவிடும்”னு அவர் சொல்லவும் எம்ஜிஆர் ஏத்துக்கிட்டார்.

Source: Tamil the hindu

To be contd:

About

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …