Breaking News
Home / இன்று ஒரு தகவல் / நா.முத்துக்குமாரின் 3 நிறைவேறாத ஆசைகள்..!
Na-muthukumar

நா.முத்துக்குமாரின் 3 நிறைவேறாத ஆசைகள்..!

நா.முத்துக்குமாரின் 3 நிறைவேறாத ஆசைகள்..!

‘புல்வெளி’ காமராசன், 90 களில் காஞ்சியில் இலக்கிய ஆர்வத்தில் கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் முக்கியமானவர். 1989ல் காஞ்சி இலக்கிய வட்டத்தை துவங்கியவர்களில் ஒருவர். கசடற, புல்வெளி போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். மறைந்த கவிஞர் முத்துக்குமாரின் இளமைக்கால நண்பர். அவரது கடைசிக் காலம் வரை இலக்கிய நண்பராக இருந்தவர். உலக சினிமாவுக்கான அமைப்பான தரைஅரங்கத்தை காஞ்சியில் நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார்.

புதுமைப்பித்தன் மீதான ‘விமர்சனங்களின் விமர்சனம்‘, ‘இருண்மைக்கவிதைகளின் அரசியல்‘ என்ற என்ற நூல்களையும், விதைக்குள் விருட்சம் என்ற ஐக்கூ கவிதை நூல், அகநாழிகை பதிப்பக வெளியீடாக ‘34வது கதவு‘ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை நூலையும், பேசாப்பட யுகத்தில் புகழ்பெற்று விளங்கிய சாப்ளினின் நண்பர் பஸ்டர் கீட்டன் என்ற நடிகர் இயக்குநரைப்பற்றிய அறிமுக புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

1990களின் தொடக்கத்தில் தமிழ்திரைப்படப்பாடல்கள் குறித்த விரிவான ஆய்வுக்கட்டுரையை தயாரித்தவர். தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். குறிப்பாக சொல்ல ஒன்றிருக்கிறது. நா.முத்துக்குமார் தனது ‘வேடிக்கைப்பார்ப்பவன்‘ நூலில் ‘நான் சினிமாவுக்கு செல்ல காரணமாக இருந்தவர் காமராசன் ‘என குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்காலத்திலிருந்தே முத்துக்குமாரை அறிந்தவரான இவர், அவருடனான தன் பயணத்தை உருக்கமாக நம்மிடம் விவரித்தார்.

“ எனக்கு அந்த செய்தி வந்தபோது பாண்டிச்சேரியில் பழைய புத்தகக்கடை ஒன்றில் பட்டாம் பூச்சி விற்பவன் புத்தகத்தை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அதிர்ச்சியாகிவிடக்கூடும் என்பதால் எனக்கு தகவல் சொன்னவர் மெதுமெதுவாகத்தான் செய்தியை தடுமாற்றங்களுடன் சொல்லிமுடித்தார். என்னிடம் இருந்த புறப்பட்ட அலறலில் கடைக்காரர் சட்டென என் அருகில் ஒரு இருக்கையை போட்டார்.

முதலில் மனம் நம்ப மறுத்தது. சிலவருடங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் முத்துக்குமார் சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி வந்திருந்தது. அதை படித்ததும் தொலைபேசிமூலம் பதற்றத்துடன் நான் அவரை தொடர்பு கொண்டேன். கடகடவென சிரித்தபடி, இப்படிச் சொன்னார். ‘என் மரணத்தை நானே கேள்விப்படும் முதல் மனிதன் நான்தான்”. பிறகு அந்த தவறான செய்தி பரப்பப்பட்ட விதம் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டது.

தொடர்பு எல்லைக்கு வெளியே நின்ற கவிஞன்

இப்போது அவருடைய தொலைபேசிக்கு அழைப்புவிடுத்தேன். ‘தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்’ என்றது பதிவுசெய்யப்பட்ட குரல். வழக்கமானதுதான் என்றாலும் இந்த குரல் இப்போது பகீர் என்றது. ஆம் அது சொன்னது உண்மைதான். அந்த உண்மை மற்ற நண்பர்கள் மூலம் ஊர்ஜிதமானது.

நண்பரின் வீட்டிற்கு விருந்தினராக குடும்பத்தோடு பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறேன். அவர்களும் என்னை புரிந்துகொண்டு வழிஅனுப்ப, குடும்பத்தை அவர்களிடம் விட்டுவிட்டு சென்னைக்கு புறப்பட்டேன். மனம் முத்துக்குமாரை கூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு பறந்தது.

இந்திப்பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அன்னக்கிளியை காதருகே கொண்டுவந்து தமிழ் இசைப்பாடல்களுக்கு புத்துயிர்ப்பூட்டிய இளையராஜாவைப்போல் கம்பஇராமாயணமும், புராணக்கதைகளையும், பல்உடைந்துபோகும் சந்தம் கொண்ட மரபுக்கவிதைகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த காஞ்சி இலக்கிய பூமியில் நவீன இலக்கிய விதைகளை துாவ வந்தவர்தான் எங்கள் நாராயணன்; இலக்கியவட்டத்தின் பிதாமகர். பஞ்சபாண்டவர்களாக தரும ரத்தினகுமார், செ.காமராசன் (நான்), அமுதகீதன், எக்பர்ட் சச்சிதானந்தம்,மோகன். அடுத்த சில நாட்களில் எங்களோடு வந்து இணைந்தவர், நாகராசன். ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளி ஒன்றின் ஆசிரியர்.

அவர் உடல் புத்தகத்தாலும் அறிவு நினைவாற்றலாலும் ஆனது. அவர் வீட்டிற்கும் பள்ளிக்கும் அரைமணியில் அடைந்துவிடும் தூரம். அவர் வந்துசேர அரைநாள் ஆகும் வழியில் புத்தகக்கடைகள். சில சமயங்களில் பலருக்கும் இவர் ஆசிரியரா பழைய புத்தகங்களை எடைக்கு எடுப்பவரோ என சந்தேகமே வந்திருக்கிறது. அவ்வளவு புத்தகங்களை சேர்த்து வைத்திருந்தார். தீவிர வாசகர். அவரோடு ஒரு குட்டிப்பையன் ஒல்லியான தேகம், ஒடுங்கிய முகம் ஆர்வமான கண்கள் எதையும் கேட்க ஆர்வம். அவர் பெயர் முத்துக்குமரன். அப்படித்தான் கூட்டப்பதிவேடுகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.

முதல் பெருங்கூட்டம் 27-05-1989 லா.ச.ராவிடன் நேருக்கு நேர். நான் அப்போது கல்லுாரி மாணவன், ‘அபிதா’வில் மயங்கி ‘புத்ர’வில் சொக்கிக்கிடந்த காலம். அந்தக்கூட்டத்தில் ஒரு வாசகர் லா.ச.ராவிடம்  12 வயதில் உங்களுக்கு வந்தது காதலா, காமமா எனக் கேட்டார். அதற்கு லா.ச.ரா, ‘அது என்னவென்று சொல்லத்தெரியவில்லை. அது காதலாக இருக்கலாம் என்றார். விவாதம் ரசாபாசமானது. அது காமமே என வாதிடத்தொடங்கிய அந்த வாசகர் கைகலப்பு வரை கொண்டுவந்துவிட்டார். அன்று அந்த விவாதத்தை மிகத்தெளிவான கருத்துக்களைக்கூறி முடிவுக்கு கொண்டுவந்தார் ஒரு நபர். அவர்தான் கவிஞர் அறிவுமதி. இது குறித்து தனது ‘வேடிக்கை பார்ப்பவனில்’ முத்துக்குமார் எழுதியுள்ளார்.

லா.ச.ரா வின் கதாநாயகி…

அன்று சிறுவனான முத்துக்குமார் ஆட்டோவில் லா.ச.ராவின் மடியில் அமர்ந்தபடி அய்யம்பேட்டை என்ற பகுதிக்கு அவரோடு வந்திருந்தார். அபிதா என்ற நாவலின் கதாநாயகி அய்யம்பேட்டைத்தெருவில் இருந்தார். லா.ச.ரா, காஞ்சியை அடுத்த அய்யம்பேட்டை என்ற ஊரில்தான் வளர்ந்தவர். பழைய நினைவுகளைத்தேடிச் சென்றார். நாங்களும் உடன் தேடிச் சென்றோம். அபிதாவின் நாயகி வயதான கிழவியாக இருந்தார். அன்றைக்கு லா.ச.ரா அவரைப்பார்த்த பார்வை அப்போது எதுவும் புரியவில்லை. இன்று நினைவுபடுத்திப் பார்க்கும்போது உறைந்த இலக்கியமாய் தெரிகிறது. அந்த இரண்டு நாட்கள் என்னோடு இருந்தார் முத்துக்குமார். அப்போது தொடங்கி என்னோடு வாதம்,பிரதிவாதம், வாசிப்பு என கலந்து வளர்ந்தோம்.

வண்டி வழியில் தேநீருக்காக நின்றதில் நினைவு தடைபட்டது. பசி எனக்கு. ஆனாலும்  நண்பனைப் பார்க்கும் வரை எதையும் சாப்பிடக்கூடாது என முடிவெடுத்திருந்தேன். பசி என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் அப்போது சென்னையில் தனியார் கல்லுாரி ஒன்றில் வேலைபார்த்துவந்தேன். முத்துக்குமார்தான் என்னை பால்சுகந்தி மேன்ஸனில் திரு. அஜயன் பாலாவுடன் தங்க வைத்திருந்தார். ஒரு மாலைவேளை நான் என் அறையில் ஒரு பிரியாணி பொட்டலத்தை வைத்துக்கொண்டு அவருக்காக காத்திருந்தேன். அவசரமாக வந்தவர் என் உணவுப்பொட்டலத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு போனார். எங்கே சென்றார் என தெரியாது.

சிறிது நேரம் கழித்து வந்தவர் ஒரு உதவி இயக்குநரின் பெயரைச்சொல்லி , “அவர் சாப்பிடவே இல்லையாம் பசின்னாரு. அதுதான். நாம அப்புறம் சாப்பிடலாம்” என்றார். இந்த குணம்தான் அவருக்கு ஆயிரக்கணக்காக அண்ணன் தம்பிகளை பெற்றுத்தந்தது. வண்டி தொடர நினைவுகளும் பறக்கத்தொடங்கின.

பள்ளியிலிருந்து விரட்டிய கவிதை

அவருடைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு வாசிப்பு மட்டுமல்ல தெரிவு வாசிப்பும் முக்கியம். மற்றெல்லா எழுத்தாளர்களைப்போல வணிக இலக்கியம் மூலம் நவீன இலக்கிய வாசிப்பு என அவர் சுற்றிவரவில்லை. எங்களின் பரிந்துரைகளை உள்வாங்கி வெகு சீக்கிரமே இலக்கிய வாசிப்புக்கு வந்துவிட்டார். நவீன கவிஞர்கள் காஞ்சி இலக்கிய வட்டத்தில் வெளியிடுவதே மரபு என்ற அளவுக்கு கவிதைப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இவற்றால் ஈர்க்கப்பட்ட முத்துக்குமார், கவிதைகள் எழுதத்தொடங்கினார். பத்திரிகைகளுக்கு அனுப்பும் பொறுப்பு அவர் தந்தைக்கும் அவரது ’நுலக நண்பர் ரோச்சிற்கும் (இவரை சந்திக்க வேண்டும் என என்னிடம் பல முறை கூறியுள்ளார். கடைசியாக சந்தித்தபோதுகூட இந்த ஆசையை என்னிடம் வெளிப்படுத்தினார்)

இவருடைய முதல் கவிதைத்தொகுப்பு துாசிகள் வெளியானபோது, இவர் 11ஆம் வகுப்பு மாணவர். எல்லோரும் அவர் கவிதைகளை பாராட்ட அவர்படித்த பள்ளி நிர்வாகம் அவரை தற்காலிக நீக்கம் செய்துவிட்டது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களைப்பற்றி கவிதையின் விளைவுதான் அது. எக்பர்ட் சச்சிதானந்தமும், சாலமன் ஜெயக்குமாரும் அந்தப்பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் முன்னெடுக்க வெ.நாராயணன் தலைமையில் அனைவரும் சென்று போராடி அவர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். முதல் கவிதைத்தொகுப்பே போரட்டத்தின் வடிவமாயிற்று.

சுஜாதாவால் கிடைத்த முதல் மேடை

பச்சையப்பன் கல்லுரியில் கவிதைக்கு அவர் வாங்காத பரிசுகளில்லை. இயற்பியல் மாணவரான அவர் தமிழின் ஈர்ப்பினால் எம்.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். இந்த காலகட்டத்தில்தான் அவருக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்தது. கணையாழியில் தொடர்ந்து எழுதிவந்தார். இவர் எழுதிய துர் என்ற கவிதை எழுத்தாளர் சுஜாதாவை கவரவே இவரை பரவலாக அறிமுகப்படுத்தினார் சுஜாதா.

அன்றைக்கு கணையாழி கூட்டத்தில் நடந்தது இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. கணையாழி ஒரு அறக்கட்டளை ஏற்க அதற்கான விழா அது. மேடையில் இன்றைய கவிதைகளை பேச வந்த சுஜாதா இவருடைய கவிதை துர் படித்துவிட்டு இந்தக்கவிதையை யார் எழுதியது எனத்தெரியாது என்றார். கூட்டத்தில் இருந்து முத்துக்குமார் கையை உயர்த்தினார். அவர் மேடைக்கு அழைக்க ஒரு வாசகர் சில ரூபாய்களை பரிசாக அளித்தார். அதை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் நிதானமாக அதை மேடையிலேயே எண்ணிப்பார்த்தார். பிறகு மைக்கைப்பிடித்து ‘இந்த ரூபாய்களை கணையாழிக்கே அளிக்கிறேன்’ என்றார் அரங்கம் அதிர்ந்தது. அன்று தொடங்கி அவரின் கடைசி நிகழ்ச்சிவரை அரங்கத்தை தன் பேச்சால் கவிதைகளை அதிரவைத்துக்கொண்டே இருந்தார்.

பேருந்தில் யாரோ லட்சுமி இறங்கு என்று யாரையோ அழைத்துக்கொண்டிருந்த குரல் என்னை லட்சுமிக்குள் இழுத்துச்சென்றது. ஒருநாள் நான் பள்ளியில் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. பள்ளியில் நான் தொலைபேசியை சைலென்ட் மோடில் வைத்துவிட்டு பாடம் நடத்துவது வழக்கம். எனவே உணவு இடைவேளையில் என் கைபேசியில் இரு தவறிய அழைப்புகள் முத்துக்குமார்தான். ‘என்ன அவசரமோ’ என அழைத்தேன். ‘எனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறதுங்க’ என்றார் உற்சாகமான குரலில். ‘வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்தினேன்.

தாயை மடியில் கிடத்திய தனயன்

மறுநாள் என் குடும்பத்தாரோடும், நண்பர்கள் தரும.இரத்தினகுமார் கார்த்தியோடும் அவரைப்பார்க்க சென்றோம். கடுமையான பணி மற்றும் தூக்கமின்மையால் சோர்வாக இருந்தார். எங்களைப்பார்த்ததும் உற்சாகமானார்.

எப்போது சந்தித்தாலும் அவர் கேட்கும் அதேகேள்வியை அன்றும் கேட்டார், ‘என்ன படித்தீர்கள்’. பின்னரே நலம் விசாரிப்பு. அத்தனை புத்தகப்பிரியன் என் நண்பன். உணவு வழங்கினார்; தூங்கி எழுந்திருந்த குழந்தையை கொண்டுவந்து காட்டினார். என் மனைவி தண்டையை அணிவித்தபடி குழந்தைக்கு என்ன பேருண்ணா என்று கேட்டார். குழந்தையை தடவியபடி ‘என் அம்மா’ என்றார். நாங்கள் புரியாமல் பார்த்தோம். ‘நான் எங்கம்மா மடியில் தவழ்ந்த ஞாபகமே இல்லை. என் அம்மா என் மடியில் தவழட்டுமேன்னு அவ பேரான லட்சுமின்னு வச்சிருக்கேன்’னு என்றார்.இன்று அவள் மடிதேட அவள் தந்தை எங்கே?

சுமார் 11 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் திரைப்படத்துறையில் முந்நிலையில் இருந்ததற்கு காரணம் அவரின் திட்டமிடுதலும் கடினத் தயாரிப்பு மட்டுமே.

சினிமா வெற்றியின் ரகசியம்

அவர் தமிழ்த்திரையுலகில் வெற்றிகரமாக விளங்கிவந்ததற்கு மூன்று வேலைத்திட்டங்களே காரணம். ஒன்று அவருடைய தந்தையின் நுலகத்தில் இருந்தும் என்போன்ற நண்பர்கள் மூலமும் சேகரித்த ஏராளமான பாட்டுப்புத்தகங்களை மிகப்பொறுமையாகவும் அக்கைறையாகவும் படித்ததோடு அவற்றில் இலக்கிய வரிகள் எங்கெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து குறிப்பெடுத்து வைத்தார். அதைத்தான் பின்னாட்களில் தன்னுடைய ஆய்வேடாக சமர்ப்பித்து பட்டம் பெற்றார்.

இரண்டாவது, அண்ணன் அறிவுமதி அவர்கள் தந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார். அவருடைய ‘உள்ளேன் ஐயா’ படத்திற்காக வந்த இசை என்கிற இசை அமைப்பாளருடன் இணைந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை தாளத்திற்கு ஏற்ப எழுதி எழுதி தன்னை செழுமைப்படுத்திக்கொண்டார்.

மூன்றாவது, ஒருநாளில் குறைந்தது இரண்டு மணிநேரமாவது படிப்பார். நல்ல தரமான இலக்கிய புத்தகங்களை பார்த்தமாத்திரத்திலேயே கண்டுபிடிக்கும் திறமை அவருக்கு இருந்தது. ‘கோணங்கியின் படைப்புகள்’ புரியவில்லை என்று வாசகர்கள் அவரை வறுத்தெடுக்கப்பட்ட ஒருசமயம் முத்துக்குமார் நிகழ்த்திய உரை எங்களுக்கு புதியதொரு வாசிப்புமுறையை அறிமுகப்படுத்தியது. எல்லாவற்றையும்விட அவர் மூளையை பல சேனல்கள் கொண்ட மீடியாவாக வைத்திருந்தார். ஒன்றில் எதிரில் இருப்பவரோடு உரையாட; வேறு சேனல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்.

நாராயணனின் மறைவுக்குப்பின் காஞ்சியில் வாசகர் எண்ணிக்கை குறைய, நாங்கள் தோய்ந்துபோன சமயம் உலகசினிமா பார்க்க ஒரு அமைப்பை தொடங்கலாமா என நான் முத்துக்குமாரிடம் ஆலோசனை கேட்டேன். அன்றே நண்பர்கள் தரும ரத்தினகுமாரையும், லோகநாதன் அவர்களையும் அழைத்து 25,000 ரூபாய்க்கு செக் எழுதி புரொஜக்டரை வாங்கித்தந்தார். அந்த அமைப்பின் பெயர் தரை அரங்கம்; இன்றும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

நினைவு தடைபட்டது. வண்டி கோயம்பேடு வந்தடைந்துவிட்டது மணி 6.30 அங்கிருந்தே ஆட்டோவில் ’சுற்றி சுற்றி அவருடைய வீடு அடைந்தபோது மணி 7. ஊர்வலம் போயிருந்தது. கண்களில் நீர்பெருக்கெடுத்தது. ‘ஐயோ என் நண்பனை பார்க்க முடியவில்லையே’ என்று கதறினேன். என் காஞ்சி நண்பர்கள் வாகனம் எடுத்துவந்திருந்தார்கள். எங்கே சுடுகாடு என தெரியாமல் சிதறிக்கிடந்த பூக்களைப் பார்த்து அதன்வழி சென்று சுடுகாட்டை அடைந்தோம். வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறேன்… சரியான கூட்டம். ஒரு தடுப்பு தாண்டி உள்ளே ஓடுகிறேன். என் நண்பன் எனக்காக காத்திருந்தான்…

பாடையில் அவன் முகம் பார்க்கையில் நான் உணர்விழந்து கதறினேன். பார்க்கும்போதெல்லாம் அவன் கேட்கும் முதல் கேள்வி, ‘இப்ப என்ன படிச்சீங்க’ என்பதுதான். இதோ அவன் முகம் என்னைப்பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறது. என் மனம் பதில் சொல்கிறது. இதோ எங்கோ கிராமத்தில் பிறந்து படித்து, உழைத்து இதோ ஆயிரக்கணக்கான நண்பர்களை மயானத்தில் ஒன்று சேர்க்கும் அளவு உயர்ந்து நிற்கும் உன்னைப் படிக்கிறேன் நண்பா… வரும் தலைமுறைக்கு நீயே புத்தகமல்லவா நண்பா’ என்கிறேன். என்னில் இருந்து விலகி ஒடுகிறான்… நான் அவனைத்துரத்துகிறேன்.  தீக்குள் விழுந்துவிட்டான் தீ அவனைப்படிக்கிறது…

நிறைவேறாத 3 ஆசைகள்

அவருக்கு சில எதிர்கால திட்டங்கள் இருந்தன. சந்திப்பின்போதெல்லாம் கண்களில் வெளிச்சம் பரவ அதை என்னிடம் சொல்வார். ஒன்று காஞ்சி மாநகரத்தை மையமாக வைத்து காவல்கோட்டம் போன்ற வரலாறும் புனைவும் கலந்த நாவல் ஒன்றை படைக்கவேண்டும். இரண்டு, தன்னுடைய பாடல்களை எல்லாம் ஒரே தொகுப்பாக சில குறிப்புகளை கவித்துவமாக எழுதி வெளியிடவேண்டும். மூன்று சமீபத்தில் குங்குமத்தில் வெளியான கட்டுரை ஒவ்வொன்றும் சிறுகதையாக வந்ததை தெரிவித்தபோது, ஒரு சிறுகதைத்தொடர் வெளியிடவேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

இந்த ஆசைகளை நிறைவேற்றும் முன்னரே அவர் விடைபெற்றுவிட்டார். வயதுக்கும் காலத்திற்கும் ஏற்ப நல்ல திட்டங்கள் இவை. இது நிறைவேறியிருந்தால் தன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்று இருப்பார். காலம் அவரது கனவுகளை தின்றுவிட்டது.”

Source: the vikatan group

About

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …