Breaking News
Home / அ.தி.மு.க.(ADMK) / கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?
MGR centenary

கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

RTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

கணக்குத் தர மறுக்கும் தமிழக அரசுவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கணக்கில் வராத கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் இந்த விழாக்களுக்கு செலவழிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கி, தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. கன்னியாகுமரியில் இம்மாதம் 22-ம் தேதி விழா நடக்கிறது. சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நிறைவு விழாவாக இது நடைபெற உள்ளது. இந்த விழாக்களுக்கான செலவுகள் பற்றிய வெளிப்படைத்தன்மை தமிழக அரசிடம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டபோது, இந்தச் செலவுகள் பற்றிய விவரங்களைத் தரவும் அரசு தயாராக இல்லை.

இது தொடர்பாக, ‘எம்.ஜி.ஆர் பேரைச் சொல்லி ஏப்பம்?’ என்ற பெயரில் ஜூ.வி 21.02.2018 இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டோம். கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் லோகநாதன், தமிழக அரசின் பல துறைகளுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்த தகவல்களைக் கேட்டு மனு செய்தார். அந்த மனு பல துறைகளைச் சுற்றிவந்தது. கடைசி யில் மழுப்பலான பதில்களே தரப்பட்டன. ‘விகடன் ஆர்.டி.ஐ குழு’வின் மூலமும் தகவல்கள் கேட்டு தமிழக அரசின் செய்தி மக்கள்தொடர்புத் துறைக்கு மனு செய்தோம். அந்த மனுவையும் சுற்றவைத்து, நம்மைத் தலை சுற்றி விழ வைக்கலாம் என்று நினைத்தனர். அவர்களின் எண்ணம் ஈடேற வில்லை. சளைக்காமல் மீண்டும் மீண்டும் மனு செய்து, ஓரளவு தகவல்களைப் பெற்றோம். அந்தத் தகவல்களின் அடிப்படை யில் சில ஆய்வுகளிலும் இறங்கினோம்.

திண்டுக்கல்லில் 2017 டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஏழு கேள்விகளை திண்டுக்கல் கலெக்டருக்கு அனுப்பினோம். அதற்கு உரிய பதில் தராமல், 2017 ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் நகலை மட்டுமே நமக்கு அனுப்பினர். அதில், ‘தமிழக அமைச்சரவைக் கூட்டம் 2017 மே 2-ம் தேதி நடந்தது. அதில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் (சென்னை, மதுரை நீங்கலாக) ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசுக்குச் செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதற்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம், ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பணம் செலவிடவில்லை’ என்று நமக்கு பதில் கூறியுள்ளது. (நமக்கு அமைச்சர் அளித்த பதிலில் கலெக்டர்கள் செலவிட்டனர் என்று சொல்லியிருக் கிறார்.) பல மாவட்ட கலெக்டர்களும் இந்த அரசாணையையே பதிலாக நமக்கு அளித்திருந்தனர். இதர கேள்விகளை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து, ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க ஒரு கோடியே மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 968 ரூபாய் செல விடப்பட்டது’ என்று தகவல் தந்தனர். இதே தொகை, பிற மாவட்டங்களிலும் செலவழிக்கப்பட்டிருக்கக் கூடும்.

‘இது ஓர் அரசு விழா, இதற்காக ஒவ்வொரு மாவட்டத் துக்கும் ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லப்பட்டாலும், அதைத் தாண்டி அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமும் இதில் உண்டு. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தலையில்தான் செலவுகள் சுமத்தப்பட்டன. இதற்காக, அமைச்சர்கள் வசூல் வேட்டையில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது. இப்படியாக, அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் பணத்தை வசூல் செய்து கொடுத்துள்ளனர். ‘‘கணக்கில் வராத கறுப்புப் பணம், இந்த விழாவுக்காக இப்படி செலவிடப்பட்டுள்ளது’’ என்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

கோவையைச் சேர்ந்த ராகவேந்திரா செந்தில் என்ற பந்தல் கான்ட்ராக்டர்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பெரும்பாலான பந்தல்களை அமைத்துக் கொடுத்ததாக அறிந்தோம். அவரிடம் ஒரு வாடிக்கையாளரைப்போல பேசிய நாம், “நாங்கள் ஒரு இளைஞர் கட்சியைத் தொடங்கப்போகிறோம். அதற்கான தொடக்க விழாவைப் பிரமாண்டமாக நடத்தவுள்ளோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாநாடு போலப் பிரமாண்டமாகப் பந்தல் அமைக்க வேண்டும்” என்று கூறினோம். அதற்கு அவர், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ஆறு டீம்கள் வேலை செய்தோம். ஒரு டீம் ஆறு விழாக்களுக்கான வேலைகளைச் செய்தது. இன்னொரு டீம்  12 விழாக்களுக்கான வேலைகளைச் செய்தது. இதேபோல, எல்லா டீம்களுக்கும் வேலைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன. விழாப் பொறுப்பு நான்கு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் 16 விழாக்களுக்கு பொறுப்பேற்றிருந்தார். அவரிடமிருந்துதான் கரூரில் நடந்த விழாவுக்கு  எங்களுக்குப் பணம் கிடைத் தது. ஸ்டேஜ், (மேடை அலங்காரம், ஃப்ளெக்ஸ் எல்லாம் சேர்த்து) ரூ.12 லட்சம் ரூபாய் பேக்கேஜ், ஸ்டால் போட்டது ரூ.10 லட்சம், எலெக்ட்ரிகல் வேலைகளுக்கு (ஜெனரேட்டர் உள்ளிட்டவை) ரூ.12 லட்சம் ஆனது. இதற்கான பணத்தை அமைச்சர் அன்பழகன் எங்களுக்குக் கொடுத்தார். நாங்கள் பில் கொடுக்கவில்லை; அவர்களும் பில் கேட்கவில்லை. அரசு தரப்பிலிருந்தும் எங்களிடம் பில் எதுவும் கேட்கவில்லை. ஒரு விழாவுக்கு அரசு சார்பில் நான்கு லட்ச ரூபாய் மட்டுமே செலவழித்தார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான தங்கும் செலவு உள்ளிட்டவற்றுக்கான தொகைதான் அது” என்றார் விளக்கமாக.

எத்தனை கோடிகள் எப்படி செலவாகியிருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையே, அரசாணையை மேற்கோள் காட்டி, அதன்படி விழாவுக்கு செய்யப்பட்ட செலவுகளை தரும்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(விழா) துறை, சென்னை மற்றும் விழுப்புரம், திண்டுக்கல் மாவட்டங்களின் ஆட்சியர் ஆகியோரின் தகவல் அலுவலர்களுக்கு தனித்தனியே ஆகஸ்ட் 2-ம் தேதி மனுக்கள் அனுப்பினோம். 40 நாள்கள் கடந்த பின்னும் பதில் வரவில்லை.

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பேசினோம். ‘‘அரசாணை வெளியிட்டு விழாக்கள் நடத்தியிருந்தால், கண்டிப்பாகக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். அதைக் கொடுக்கவில்லை என்றால், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. விழாக் குழு சார்பில் டெண்டர் விடப்பட்டு வேலைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். விழாவுக்கான செலவுகளை அரசுத் தரப்பில் காசோலை மூலம்தான் தரவேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை. முறைகேடு நடந்திருப்பது பளிச்சென்று தெரிகிறது” என்றார்.

அரசுத் துறை செலவுகள், மத்திய அரசின் தணிக்கை அலுவலகங்கள் மூலம் தணிக்கை செய்யப்படும். சென்னையில் உள்ள மண்டலத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய ஆடிட்டர் ஒருவரிடம் பேசினோம். ‘‘அரசுத் துறைகளில் தணிக்கைத்துறை ஆய்வு என்பது 100 சதவிகிதம் நடப்பதில்லை. ஒரு துறையில் ஒரு மாதம் மட்டும் நடைபெற்ற பரிவர்த்தனைகளை, மாதிரியாக எடுத்து ஆய்வு செய்வோம். அதாவது, மொத்த ஆவணத்தில் 8.33 சதவிகிதம் அளவுக்கே ஆடிட்டிங் செய்வோம். இந்தக் குறைந்தபட்ச ஆய்விலேயே, பல்வேறு முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். முழுமையாக ஆய்வு செய்தால், நிறைய முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

ஓர் அரசுத் துறையில் குறிப்பிட்ட முறைகேடு புகார் எழுந்தால், அந்தத் துறையின் வரவுசெலவுகளை முழுமையாக ஆய்வு செய்யும்படி தலைமைத் தணிக்கை அதிகாரி உத்தரவிடுவார். அதன் அடிப்படையில்தான் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. ஆனால், ஊழல் நடைபெறவில்லை என்பதைப்போல ரசீதுகள் தயாரிப்பார்கள்.     எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முறைகேடு நடந்திருக்கிறது என்று தலைமைத் தணிக்கை அதிகாரியிடம் புகார் செய்தால், அதன் அடிப்படையில் முழுமையாகத் தணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியும்” என்றார்.

– கே.பாலசுப்பிரமணி


‘‘உங்களிடம் மக்கள் கணக்கு கேட்டார்களா?’’

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாச் செலவுகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனிடம் பேசினோம். பந்தல் கான்ட்ராக்டரிடம் நாம் பேசியதைச் சொன்னோம். ஆரம்பத்திலேயே அதை மறுத்தவர், ‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு நான் பொறுப்பாளராக இல்லை. அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் செய்தனர். இது அரசு விழா. இதை அதிகாரிகள் தான் நடத்தினர். கலெக்டர்கள், துறை அதிகாரிகள் பொறுப்பு எடுத்துக் கொண்டனர். இதில் நான்கு அமைச்சர்கள் மட்டும் பொறுப்பு எடுத்துக்கொண்டு நடத்தினார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?’’ என்றார்.

‘‘கரூர் விழாவுக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா?’’ என்று கேட்டோம். ‘‘நான் பணம் கொடுக்கவில்லை. அரசுத் துறையிலிருந்து தான் பணம் கொடுத்திருப் பார்கள். நீங்கள் சொல்லும் ராகவேந்திரா செந்தில் என்பவர் பந்தல் போட்டாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நபர் பந்தல் போட்டிருப்பார்கள். பில் தராவிட்டால் அது தவறுதான். டெண்டர் விட்டு நடத்த வேண்டும் என்று யார் கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஒரு முக்கியமான தலைவர், மூன்று முறை முதல்வராக இருந்தவர். மாவட்டம்தோறும் அவருடைய நூற்றாண்டு விழா நடந்துள்ளது. இந்த அரசு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றையெல்லாம் பாருங்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதில் உங்களுக்கு ஏதும் பாதிப்பு இருக்கிறதா?’’ என்றார் ஆவேசமாக.

‘‘எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மக்கள் பணத்தில் நடக்கும் அரசு விழாவுக்கான செலவு விவரங்களைச் சொல்ல வேண்டியது அரசின் கடமை. அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்’’ என்றோம். அதற்கு அமைச்சர், ‘‘உங்களிடம் மக்கள் கணக்கு கேட்டார்களா?’’ என்று கேட்டார். அதற்கு, ‘‘அரசை விமர்சிப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.         எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குச் செலவு செய்திருக்கிறீர்கள். அதற்கான பில் இல்லை, கணக்கு இல்லை. அதுகுறித்துத்தான் நாங்கள் எழுதுகிறோம்’’ என்று நாம் சொன்னதும், ‘‘சரிங்க சார்… நீங்க நாட்டைத் திருத்துங்க..!’’ என்றார் கோபத்துடன்.

Source: Vikatan Group

https://www.vikatan.com/juniorvikatan

About

Check Also

222

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் …