Breaking News
Home / அரசியல் செய்திகள் / வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
222

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்துவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து, தேர்தல் திருவிழாவை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்தது. இக்கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி விஞ்ஞான் பவனில், 17வது மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது. மே 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதனையடுத்து தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சினிமா பிரபலங்கள், பத்திரிக்கைத்துறை, விளையாட்டு வீரர்கள், சாதனை படைத்த வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

About yuvaraj

Check Also

petrol-price-hike2

இடியாய் இறங்கும் பெட்ரோல் குண்டு

இடியாய் இறங்கும் பெட்ரோல் குண்டு -மதுக்கூர் இராமலிங்கம் வரி விதிப்பால் மோடி அரசுக்கு 11லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் …