Breaking News
Home / தமிழகம் / தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் ஆள்மாறாட்டம்?: 2 மாணவர்களின் புகைப்படங்கள் மாற்றம்…பி.எஸ்.ஜி.கல்லூரி நிர்வாகம் புகார் கடிதம்
222

தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் ஆள்மாறாட்டம்?: 2 மாணவர்களின் புகைப்படங்கள் மாற்றம்…பி.எஸ்.ஜி.கல்லூரி நிர்வாகம் புகார் கடிதம்

கோவை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (19). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 11ம்  தேதி இதுபற்றி மெயிலில் புகார் வந்தது. இதன் பின்பே தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவினர் நடத்திய  விசாரணையில் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகம், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக்  கவுன்சிலுக்கு புகார் செய்தார். பின்னர் தேனி க.விலக்கு போலீசாரிடமும் புகார் செய்தார். இதனிடையே உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார்.

இந்த வழக்கை முதலில் தேனி போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதி மலையடிவாரத்தில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த  மாணவர் உதித்சூர்யாவை நேற்று காலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து தேனி  மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கோர்ட்டில் உதித்சூர்யாவையும், அவரது தந்தையையும் இன்று காலை 10 மணிக்கு ஆஜர்படுத்த உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவையில் மாணவி, மாணவரின் நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும்  வேறு வேறாக இருப்பதாகவும், 2 மாணவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகம் சார்பில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்ட  புகாரையடுத்து கல்லூரி நிர்வாகம் நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் இரண்டு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், புகைப்படங்களில் சற்று மாறுதல் இருப்பதாக கோவை தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. புகைப்படத்தில் சற்று மாறுதல் இருப்பதால், ஆள்மாறாட்டம்  நடந்ததாக நேரடியாக முடிவுக்கு வர வேண்டாம், சான்றிதழ்களில் பழைய புகைப்படத்தை ஒட்டியிருப்பார்கள் என்பதால் மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

About yuvaraj

Check Also

111

கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு; தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

சேலம்: கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக, கேரள …